Categories
Latest News

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ !

கொரோனா வைரசின் சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 2021 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு வீடியோ மூலம் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதாவது ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது என்றும் அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் எனவும், அது மக்களின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் வணக்கம்!

எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?, கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள்மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24 முதல் ஏழு நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஏழு நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் 7 ஆயிரம் வரை எட்டிய பாதிப்பு, இப்போது 2 ஆயிரமாக குறைந்து விட்டது. இன்னும் ஒருசில நாட்களில் முழுமையாகக் குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனாலதான், கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமா 2000 ரூபாயைக் கொடுத்துள்ளோம். விரைவில் அடுத்த 2000 ரூபாயைக் கொடுக்கப் போகிறோம். இதனை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியுள்ளார்.

மக்களை நோக்கி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இருந்தாலும், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த மூன்று வார காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தட்டுபாடு என்ற இல்லை என்ற நிலைமை இப்போது இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை. நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதுதான் உண்மை.

ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். இந்தளவுக்கு தடுப்பூசி வேறு எந்த மாநிலங்களிலும் போடப்படவில்லை. ஒரு நாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம். இந்தளவுக்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை.

மக்களைக் காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. (ESI) மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பி.பி.இ கிட் (PPE Kit) உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும் என்று சொல்வார்கள். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படுகிறது.

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே நான் உள்ளே சென்றேன்!

“உங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படிச் சென்றுள்ளீர்களே” என்று பாராட்டு ஒரு பக்கம் என்றால், “முதலமைச்சர் அவர்களே நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்று உரிமையோடு பலர் கண்டிக்கவும் செய்தார்கள். தமிழக மக்களைக் காக்கவே என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை பார்க்க நான் சென்றதன் மூலமாக பதற்றம் அடையும் மக்களுக்கு நான் சொல்வது, இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும். இத்தகைய தொற்றுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அதனால் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும் அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும். முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த இரண்டாவது அலையானது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும், நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான புதிய அரசு அமைந்து மூன்று வாரங்கள் தான் ஆகி இருக்கின்றன. எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள் பல்வேறு துறைகளில் செய்யப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் இந்த கொரோனா தடுப்புச் சுவரை நாம் விரைவில் உடைத்து நொறுக்கியாக வேண்டும். அதன் பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நிகழ்காலச் சோகங்களில் இருந்து மீண்டு, எதிர்காலப் புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும்! கொரோனா தொற்றை வெல்வோம், நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்! நன்றி வணக்கம்!. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *