நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்களின் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் சோகத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் வெளியிட்டுள்ளார்.
இது போன்ற விபத்துகள் இனிமேல் தமிழகத்தில் நடப்பதை தவிர்க்கும் வகையில் அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இன்ஜினியர் மற்றும் சில கல்வி உயர் அதிகாரிகள் நியமித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.